ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் இருக்கிறார்கள்.
90 சதவீதம் பேர்
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 25 ஆயிரத்து 595 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். எனவே 89.86 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் 2-வது தவணை தடுப்பூசியை இதுவரை 12 லட்சத்து 44 ஆயிரத்து 236 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 68.78 சதவீதமாகும்.
முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மொத்தம் 28 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடும் பணி நடந்து வருகிறது.