சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தியமங்கலம் -சாம்ராஜ் நகர் ரெயில் பாதையை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்; சத்தி தொடரி இயக்கத்தினர் கோரிக்கை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தியமங்கலம்- சாம்ராஜ்நகர் ரெயில் பாதையை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சத்தி தொடரி இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-02-15 21:43 GMT
ஈரோடு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தியமங்கலம்- சாம்ராஜ்நகர் ரெயில் பாதையை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சத்தி தொடரி இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளவாடி மலைப்பாதை
ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந்து உள்ளது தாளவாடி. இது முற்றிலும் மலைப்பகுதியாகும். சத்தியமங்கலம் வன மாவட்டத்துக்குள் அமைந்திருக்கும் தாளவாடி மலையை கடந்தால் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு செல்ல முடியும்.
தாளவாடி மலையில் ஒரு பகுதி கர்நாடக மாநில எல்லைக்குள் வருகிறது. மாநிலங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் சரக்கு போக்குவரத்து தாளவாடி மலைப்பகுதி வழியாகவே நடந்து வருகிறது .சத்தியமங்கலத்தை அடுத்து பண்ணாரியில் இருந்து தொடங்கும் மலைப்பாதை திம்பம் வரை 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்து உள்ளது.
பாதிப்புகள்
சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மலைப்பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகனங்களும் இந்த மலைப்பாதையில் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, வன விலங்குகளால் வாகன ஓட்டிகளுக்கும், வாகன ஓட்டிகளால் வன விலங்குகளுக்கும் சில பாதிப்புகளும் ஏற்பட்டு வந்தன. ஆனால் வனத்துறையின் தீவிர நடவடிக்கையால் வனப்பாதை பயணம் சிறப்பாக நடந்து வந்தது.
சத்தி- சாம்ராஜ் நகர் ரெயில்
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம்- சாம்ராஜ் நகர் ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய மந்திரியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தபோது இந்த திட்டத்துக்கான தொடக்க விழா பண்ணாரியில் நடந்தது. ஆனால், வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் தொடங்கும் முன்பே கைவிடப்பட்டது.
தாளவாடி மலையில் 16 கிலோ மீட்டர் தூரம் மலைகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைத்து ரெயில்இயக்கும் இந்த திட்டத்துக்கு திட்ட மதிப்பீடுகளும் தயாரிப்பு தொடக்கப்பணியில் ரத்து செய்யப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருந்தால், ஏறத்தாழ பணிகள் முடிந்திருக்கும். இப்போது ரெயில் பயணம் தொடங்கப்பட்டு சுற்றுக்சூழலுக்கு பாதுகாப்பான பயணமாக அமைந்திருக்கும் என்கிறார்கள் சத்தி தொடரி இயக்கத்தினர்.
ஆங்கிலேயர் கால திட்டம்
இதுபற்றி சத்தி தொடரி இயக்கத்தின் தலைவர் டாக்டர் பிரபு கூறியதாவது:-
சத்தியமங்கலம் -சாம்ராஜ் நகர் ரெயில் திட்டம் என்பது ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்டது. ஆனால், அந்த காலத்தில் திட்டம் நிறைவேற்ற முடியாமல் போனது. பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டத்துக்கு உயிர் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்ததுடன் நமது பண்ணாரியில் திட்ட மதிப்பீடு தயாரிப்புக்கான தொடக்க விழாவையும் நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது வனத்துறை மூலம் தடை பெறப்பட்டு திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டது தமிழக மக்கள். குறிப்பாக மலைப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தாளவாடி பகுதி மக்களே முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர்
கோர்ட்டு உத்தரவால் பண்ணாரி-திம்பம் மலைப்பாதையில் இரவு நேர பயணம் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தாளவாடி மலைக்கிராம மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் மருத்துவ சேவைக்காக தாளவாடியில் ஹெலிகாப்டர் வசதி வேண்டும் என்று தாளவாடி மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
இந்த நேரத்தில் ரெயில் திட்டத்தின் நன்மைகளை சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. சுற்றுச்சூழல், வன விலங்குகள் பாதிப்பு இல்லாத சிறந்த ரெயில்பாதையாக இது இருக்கும். வனத்துக்கும் பாதிப்பு இருக்காது. வட மாநிலங்கள், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற மலைப்பாதை ரெயில்கள் உள்ளன.
கோரிக்கை
நமது சத்தியமங்கலம்- சாம்ராஜ் நகர் ரெயில் திட்டம் 16 கிலோ மீட்டர் அளவுக்கு மலை சுரங்க ரெயில்பாதையாக அமையும். இப்படி ஒரு திட்டம் அமையும்போது நமது பகுதி சுற்றுலா மிகப்பெரிய வளர்ச்சி அடையும். மலையில் விளையும் காய்கறிகள் எளிதாக சமதள பகுதிகளுக்கு வரும். சத்தியமங்கலம் பூ எளிதில் கர்நாடகா சந்தைக்கு செல்லும் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. கர்நாடகா, கேரளாவுக்கு குறைந்த தூரத்தில் பயணம் அமையும். இந்த திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல தகவல்களை சேகரித்து வைத்து இருக்கிறோம். ஒருபோதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த திட்டத்துக்காக கர்நாடக மாநிலத்தில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு திட்ட மதிப்பீடு பணிவரை முடித்து வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் தடை பெற்றது. எனவே தாளவாடி மலைப்பகுதி மக்களின் நலன் கருதி, பிற்கால வளர்ச்சி மற்றும் அனைத்து வகை நன்மைகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சத்தியமங்கலம்- சாம்ராஜ் நகர் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக மலைக்கிராமங்களுக்கும் சமவெளிகளுக்குமான இடைவெளி அதிகரிக்கும். மீண்டும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு நிலைக்குள் நாம் நுழைய வேண்டியது இருக்கும். சத்தி தொடரி இயக்கம் இந்த விஷயத்தை கையில் எடுத்து தொடர் மக்கள் இயக்கத்தை நடத்தும்.
இவ்வாறு டாக்டர் பிரபு கூறினார்.

மேலும் செய்திகள்