மத்தியஅரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீரத்தை போற்ற வேண்டும்; ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
மத்திய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீரத்தை போற்ற வேண்டும் என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு
மத்திய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீரத்தை போற்ற வேண்டும் என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
கடுமையாக உழைக்கக்கூடியவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை ஆளுகின்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்பது மட்டுமின்றி, இந்தியாவிலேயே இருக்கின்ற முதல் - அமைச்சர்களிலேயே கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி உளறுவதில், பொய் சொல்வதில் வல்லவராக இருக்கிறார். அவரை பொறுத்தவரையில் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டை அவர் முதல்வராக இருந்தபோதே நான் சொல்லி இருக்கிறேன்.
நிராகரிக்க வேண்டும்
இன்றைக்கு கூட்டணி இல்லை என்று சொன்னாலும் அ.தி.மு.க. முழுக்க முழுக்க பா.ஜனதா கட்சியின் அடிமையாக இருக்கிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. இன்று சுயமரியாதை பற்றியோ, பகுத்தறிவு பற்றியோ, சமூக நீதியை பற்றியோ பேசுகின்ற தார்மீக உரிமையை அ.தி.மு.க. இழந்து விட்டது. பெரியாரையும் மறந்து விட்டார்கள். அண்ணாவையும் மறந்து விட்டார்கள். எம்.ஜி.ஆரையும் மறந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதாவையும் மறந்து விடுவார்கள். கடைசியில் மக்கள் முழுமையாக அ.தி.மு.க.வை மறந்து விடுவார்கள். தமிழக மக்களுக்கு நான் சொல்வது பிரதமர் மோடியும், பா.ஜனதா கட்சியும், ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும்போது எப்படி சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாக போனதோ, அதுபோன்று இந்தியாவும் துண்டாடப்பட்டு சிதறிப்போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த நாட்டின் மீது பக்தி உள்ளவர்கள், தமிழகத்தின் மீது, தமிழர்களின் மீது அன்பு உள்ளவர்கள் பா.ஜனதா கட்சியை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
பொய்யான செய்திகளை...
சமூக ஊடகங்களில் யாரோ என்னைப்பற்றி பொய் செய்தியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்பு உடையவர்களை பற்றி நான் கருத்து கூறியதாக வந்து இருக்கிறது. அது முழுமையான பொய். நான் கடந்த 2 அல்லது 3 மாதங்களுக்கு பின் இன்றுதான் நிருபர்களை சந்திக்கிறேன். எனது கருத்தை கூறுகிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் பெரிய கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் 9 மாத ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆவின் பாலுக்கு விலை குறைத்தார். குறிப்பாக இந்தியாவிலேயே பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்த அரசாங்கம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம்தான். மத்திய அரசு கூட அதற்கு பிறகுதான் குறைத்தது. ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணம் கொடுத்து இருக்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுப்போம் என்று இப்போது அறிவித்து இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் செல்போன் கொடுப்பதாக ஜெயலலிதா இருந்தபோதே சொன்னார்கள். கொடுத்தார்களா?.
போற்ற வேண்டும்
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பற்றி கவலைப்படாமல், தமிழக மக்களுக்காக உழைக்கிறார். மத்திய அரசை இதுவரை எந்த ஒரு மாநில முதல்- அமைச்சரும் எதிர்க்காத அளவுக்கு எதிர்ப்புகளை பதிவு செய்கிறார். நமது முதல்- அமைச்சர் ஸ்டாலினின் தைரியத்தையும், வீரத்தையும் போற்ற வேண்டும். அதைவிட்டு கொச்சைப்படுத்தக்கூடாது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது. தாமரை தண்ணீரில் மலரும், தரையில் மலராது.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, மக்கள் ஜி.ராஜன், துணைத்தலைவர் ராஜேஸ், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ், நிர்வாகிகள் கே.என்.பாட்ஷா, முகமது அர்சத், சபுராமா ஜாபர்சாதிக், புனிதன், வக்கீல் ராஜேந்திரன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.