மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி

மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நடந்தது.

Update: 2022-02-15 21:21 GMT
மீன்சுருட்டி:

அகழாய்வு பணி
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் தமிழக தொல்லியல் துறை மூலம் கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன.
இந்த பணியின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
அரண்மனை பாகங்கள்
மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2-வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாளொன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்ட பணியில் 30-க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி நடந்தது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது.
இரண்டாம் கட்ட அகழாய்வு பணி
இதைத்தொடர்ந்து இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த 11-ந்தேதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்ட அகழாய்வின்போது சோழர் காலத்து கட்டிடங்கள் இருந்ததற்கான சான்றாக பல்வேறு தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 10-க்கு 10 சதுர அடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இந்த பணியில் தற்போது 12 பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பணியில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்