ஓட்டல் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
ஓட்டல் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
ஓட்டல் மேலாளர்
பெரம்பலூர் மாவட்டம் ஒகளுரில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் முத்துகுமார். இவருக்கு சொந்தமான வீடு பெரம்பலூர் டவுன் வடக்கு மாதவி ரோட்டில் உள்ள குறிஞ்சி நகரில் உள்ளது. இவரது வீட்டின் முதல் தளத்தில் கண்ணதாசன்-மைதிலி தம்பதியினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். கண்ணதாசன் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இதனால் மைதிலி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அந்த வீட்டின் தரை தளத்தில் செந்தில்குமார் வசித்து வந்தார். இவர் தொண்டமாந்துறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவிட்டு, கடந்த 6 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணி மாறுதலாகி, குடும்பத்துடன் அங்கு சென்றுவிட்டார். செந்தில்குமாரின் வீடு பூட்டிய நிலையிலேயே உள்ளது.
நகை-பணம் திருட்டு
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 5-ந்தேதி மைதிலி தனது மகன்களுடன் சென்றுவிட்டார். நேற்று மாலை ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு அவர் திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கத்தோடுகள், மோதிரம், தங்கக்காசு உள்பட 3 பவுன் நகைகள், வெள்ளிக்கொலுசு 3 ஜோடி மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மைதிலி, பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
கடந்த சில நாட்களாக பகலில் நோட்டம் விட்ட திருடர்கள் முதலில் செந்தில்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு நகைகள், பணம் ஏதும் கிடைக்காததால், கண்ணதாசன் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிசென்றுள்ளனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.