ஹிஜாப் விவகாரம்; கர்நாடக ஐகோர்ட்டில் 3-வது நாளாக விசாரணை
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. ஒரு மாணவி மனுவை வாபஸ் பெற்றார்.
பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. ஒரு மாணவி மனுவை வாபஸ் பெற்றார்.
மத அடையாள ஆடைகள்
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 18 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல தங்களை அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினர்.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு, மாணவர்கள் யாரும் மத அடையாள ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று கூறியது.
எந்த தடையும் இல்லை
இந்த நிலையில் இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று 3-வது நாளாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்மகுமார், ‘‘நான் சீருடை விவகாரத்திற்குள் போவதில்லை. கர்நாடக அரசு சீருடையை முடிவு செய்ய ஒரு உயர்மட்ட குழு அமைத்தது.
அதனால் சீருடை அணிய வேண்டும் என்று சொல்வதே அர்த்தமற்றது. சீருடை குறித்து முடிவு செய்யாமல் சீருடை அணிய வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ஹிஜாப் அணிய எந்த தடையும் இல்லை. நாங்கள் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் ஆடை அணியவில்லை’’ என்றார்.
அப்போது அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி வாதிடுகையில், ‘‘வக்கீல் ரவிவர்மகுமார் வாதிடும் மனுதாரரான மாணவி 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஒரு மனு மீது ஏற்கனவே வக்கீல் சஞ்சய் ஹெக்டே வாதிட்டுள்ளார்.
அதே மனுதாரர் சார்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டு ரவிவர்மகுமார் வாதிடுகிறார்’’ என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவி தனது 2-வது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு இன்றைக்கு(புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.