“வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள்” - கனிமொழி எம்.பி. பிரசாரம்
“குண்டாறு அணை சீரமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள்” என்று செங்கோட்டையில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
செங்கோட்டை:
“குண்டாறு அணை சீரமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள்” என்று செங்கோட்டையில் நேற்று நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
செங்கோட்டை நகரசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் நேற்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நலத்திட்டங்கள்
செங்கோட்டை பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும் முதியோர் உதவித்தொகை, அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், முத்துசாமி பூங்கா பராமரிப்பு, அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள், குண்டாறு அணை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டங்களும் நிறைவேற்றி தரப்படும்.
எனவே, செங்கோட்டை நகரசபை உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு அளித்த சிறுமி
சர்க்கரை என நினைத்து தவறுதலாக பிளீச்சிங் பவுடரை தின்று உயிருக்கு போராடிய செங்கோட்டை மேலூரை சேர்ந்த சிறுமி இசக்கியம்மாளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பூரண குணம் அடைந்தாள். அவள் கனிமொழி எம்.பி.க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தாள்.
உரிமைத்தொகை ரூ.1,000
இதைத்தொடர்ந்து கடையநல்லூர் நகரசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு படிப்பதற்காக சென்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தி, அதனால் பல நாட்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதை நாம் பார்த்தோம். ஒரு பெண் எதை உடுத்த வேண்டுமோ அதை அவரே முடிவு செய்ய வேண்டும். அதை கேட்க வேறு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்கள், அவர்களுக்கு பாதுகாப்பான ஆடையை அணிந்து சென்றபோது, அதையும் இவர்கள் தடுத்தனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அனைத்து பெண்களுக்கும் அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் குடும்ப பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது’ என்றார்.
தொடர்ந்து அவர் புளியங்குடி, சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில், தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் செல்லத்துரை, தென்காசி யூனியன் தலைவர் சேக்அப்துல்லா, ஒன்றிய செயலாளா் ரவிசங்கர், நகர செயலாளா் எஸ்.எம்.ரஹீம், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.எம்.ஷெரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.