வாக்குப்பதிவுக்கான பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி மும்முரம்
நெல்லை மாநகராட்சியில் இருந்து வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் இருந்து வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடந்தது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவடைந்தது. 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்று 7-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகளிலும், 17 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடக்கிறது. இதற்காக மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி 55 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கும் பணி கம்ப்யூட்டர் மூலம் நடந்தது. அதன்பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம், வேட்பாளர் பெயர் பொருத்தும் பணி நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பொருட்கள் அனுப்பும் பணி
இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மேற்பார்வையில் ஊழியர்கள் பிரித்து அந்தந்த மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எந்தெந்த பூத்துக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை தனித்தனியாக பிரித்து பூத் நம்பர் போட்டு அந்த பொருட்கள் அதற்குரிய பையில் வைத்து கட்டப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பணிகளும் நெல்லை மாநகராட்சியில் மும்முரமாக நடந்து வருகிறது.