தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் சில மாதங்களுக்கு முன்னர் போடப்பட்ட சிமெண்டு சாலையானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தினமும் விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
வேல்முருகன், சிவகாசி.
செய்தி எதிரொலி
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி சாலையில் குப்பை தொட்டியை சுற்றி குப்பைகள் குவிந்து கிடந்தது. இது தொடா்பான செய்தி `தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பையை அகற்றினர். மக்களின் நலன்கருதி செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், காட்டுப்பள்ளி.
கால்நடை மருத்துவமனை தேவை
சிவகங்கை மாவட்டம் கல்லல் யூனியன் அருகே பனங்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் அழைத்து சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா?
ரவீந்திரன், கல்லல்.
மின்தடை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 94-வது வார்டு வெள்ளைக்கரையை சுற்றி ஏராளமான பள்ளிகள், கோவில்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, குறு வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், சாத்தூர்.
செவிலியர்கள் பற்றாக்குறை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா திருப்பத்தூர்அருகே வடவன்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு போதிய செவிலியர்கள் இல்லை. இதன் காரணமாக இங்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
பொதுமக்கள், வடவன்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரை மாவட்டம் மாத்தூர் ஊராட்சி பில்லுசேரி கிராமம் 1-வது வார்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருகுழாய்களில் குடிநீர் வருவதில்லை. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ்குமார், மாத்தூர்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பைபாஸ் எம்.ஜி.எம். நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு கழிவுகள் சாலையில் கொட்டப்பட்டது. இதுநாள் வரை சாக்கடை கழிவுகள் அகற்றப்படவில்லை. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேணடும்.
சேகர், அவனியாபுரம்.