வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை
திருவையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவையாறு:_
திருவையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டின் கதவு உடைப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள செம்மங்குடி தெற்குத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு திருமணமாகி அனிதா (வயது29) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அசோக்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அனிதாவுடன் மாமனார் தியாகராஜன், மாமியார் கமலா ஆகியோர் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் அனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் இல்ல விழாவுக்காக கபிஸ்தலத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
நேற்று அனிதா செம்மங்குடியில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன.
நகைகள் கொள்ளை
பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதை அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் துப்பு துலக்கும் பணியை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மூலமாக வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து திருவையாறு போலீசில் அனிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.