அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளும் தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை. சீமான் குற்றச்சாட்டு
அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சிகளுமே தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை என வேலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வேலூர்
அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சிகளுமே தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை என வேலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அறிமுக கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அனைவரும் கட்சியின் கொள்கை தொடர்பான உறுதிமொழியை முதலில் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சீமான் பேசினார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நியாயமாக நடத்துவதில்லை
அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சியுமே உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை. ஆட்சி அதிகாரத்துடன் மற்ற வேட்பாளர்களை அச்சுறுத்தி திரும்ப பெற செய்கிறார்கள். இப்போதே ஆள்கடத்தல் அச்சுறுதல் உள்ளது. ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன ஆகும்.
நகர்ப்புற தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது. நேரடியாக மேயரை தேர்தெடுக்க வேண்டும். மறைமுக தேர்தல் பேரத்துக்கே வழிவகுக்கும். இது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் தான்.
‘நீட்’ விவகாரம்
நம் நாட்டின் குடியரசு தலைவரையே மக்கள் ஓட்டு போட்டு தான் தேர்வு செய்ய வேண்டும். இது தான் குடியரசாக இருக்கும்.
தேர்தல் நேரம் என்பதால் தான் அ.தி.மு.க.- தி.மு.க. ‘நீட்’ விவகாரம் குறித்து பேசுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. கார் எரியும், அலுவலகத்தில் குண்டு போடுவார்கள், தேர்தல் நேரத்தில் காவி துணி அணிந்து கல்லூரிக்கு செல்வார்கள்.
அனுமதிக்கக் கூடாது
எல்.ஐ.சி. தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்.ஐ.சி. தனியார் மயமாக்குவதை அனுமதிக்கக் கூடாது.இதில் எங்களை போலவே போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யாமல் 39 எம்.பி.க்களை வைத்துள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், வேலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பூங்குன்றன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.