ஆட்டோமீது மோட்டார்சைக்கிள் மோதி பஞ்சு மிட்டாய் விற்கும் தொழிலாளிகள் 2 பேர் சாவு
காட்பாடியில் ஆட்டோமீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பஞ்சுமிட்டாய் விற்கும் தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காட்பாடி
காட்பாடியில் ஆட்டோமீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பஞ்சுமிட்டாய் விற்கும் தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஞ்சு மிட்டாய் விற்கும் தொழிலாளிகள்
வேலூர் தொரப்பாடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35). ஜீவா நகரை சேர்ந்தவர் கார்த்தி (23). இருவரும் வேலூரில் உள்ள பஞ்சு மிட்டாய், பாப்கான் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் வள்ளிமலை தேர் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்பதற்காக ஆட்டோவில் சென்றனர்.
அங்கு விற்பனை முடிந்து நள்ளிரவு வீட்டிற்கு புறப்பட்டனர். காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே இரவு 12.30 மணிக்கு பஞ்சுமிட்டாய் ஏற்றிய ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.
2 பேர் பலி
அப்போது தேன்பள்ளி அடுத்த ஸ்ரீபாதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அவர் ஆட்டோ மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோவும் சேதம் அடைந்து ராஜசேகர், கார்த்தி ஆகியோரும் மோட்டார்சைக்கிளில் வந்த ஆல்பர்ட்டும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டனர்.
ராஜசேகர், கார்த்தி இருவரையும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கார்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆல்பர்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ராஜசேகருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவி உள்ளார். கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.