தென்பெண்ணை-பாலாறு இணைக்கப்படும்; அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தென்பெண்ணை மற்றும் பாலாறு 1½ ஆண்டுகளில் இணைக்கப்படும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.;
திருப்பத்தூர்
தென்பெண்ணை மற்றும் பாலாறு 1½ ஆண்டுகளில் இணைக்கப்படும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அறிமுக கூட்டம்
திருப்பத்தூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பிரசார கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாத காலம் ஆகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பல திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்தோம். ஆனால் கொரோனாவில் இருந்து பல உயிர்களை காப்பாற்றி அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக பல நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து மீண்டும் கொரோனா காரணமாக பல நிறுவனங்கள், அரசு ஸ்தம்பித்தது. இருந்தபோதிலும் மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி உள்ளார்.
கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த 5 பவுனை அசல், வட்டி செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
நான் 7 முறை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். அதற்கு முன்பு கருணாநிதி காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போதுதான் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று வரை அந்த திட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது.
தென்பெண்ணை- பாலாறு இணைப்பு
தென்பெண்ணை ஆற்றில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் காக்கங்கரை ஏரியில் நீரை நிரப்பி கடலுக்கு செல்வதை தடுக்க தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் வரும் 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பாலாற்றில் 1½ கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் 4 அடி உயரம் கொண்ட தடுப்பணைகள் கட்ட திட்டம் தயாராக உள்ளது.
இதுவரை மோர்தானா, ஆண்டியப்பனூர் அணை உள்பட 42 அணைகள் கருணாநிதி கூறி நான் கட்டி உள்ளேன்.
பல்வேறு சாதனைகளைப் புரியும் தி.மு.க. அரசு இன்னும் நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்பட தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் வாணியம்பாடியில் நடந்தது. நகர தி.மு.க. பொறுப்பாளர் வி.எஸ்.சாரதி குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் கிருஷ்ணகிரி அணை மற்றும் சாத்தனூர் அணைக்கு சென்று வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பாலாற்று வழியாக கொண்டு வந்து மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன்.
தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வில்லை என்றால் ஐந்து ஆண்டு காலத்திற்கும் எந்த திட்டமும் இங்கு செயல்படுத்தப்படாத நிலை உருவாகும் என்றார்.
கூட்டத்தில் கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.