ராசிபுரம், திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையம்
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்பட உள்ளன. அதன்படி ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராசிபுரம் நகராட்சி, அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதேபோல் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
இதையடுத்து ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்படும் வரவேற்பு அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வருவதற்கு ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் தனி பாதை, அரசு அலுவலர்களுக்கு தனிப்பாதை அமைக்க சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். வாக்கு எண்ணும் அறையில் முகவர்கள் பார்வையிட பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளதையும், அறைக்குள் நுழைய தனிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அடிப்படை வசதிகள்
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாக்கு எண்ணிக்கை மையத்தை தயார் செய்திட வேண்டும். அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.