ருத்ரகோடீசுவரர் கோவில் மாசி மக தேரோட்டம்

எஸ்.வி.மங்கலத்தில் ருத்ரகோடீசுவரர் கோவில் மாசி மக தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-02-15 18:24 GMT
சிங்கம்புணரி,

எஸ்.வி.மங்கலத்தில் ருத்ரகோடீசுவரர் கோவில் மாசி மக தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ருத்ரகோடீசுவரர் கோவில்

சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி.மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீசுவரர் கோவில் உள்ளது. இது திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஜந்து கோவில்களில் ஒன்று. இந்த கோவிலில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசி மக திருவிழா தொடங்கியது.
இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜையும், சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. 5-ம் நாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

தேரோட்டம்
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 4 சப்பர தேர்களில் விநாயகர், முருகன், பிரியாவிடை அம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் எழுந்தருளினார்கள். ஆத்மநாயகி அம்மன் சமேத ருத்ரகோடீசுவரர் பெரிய தேரில் எழுந்தருளினார்.
நேற்று மாலை 4.30 மணிக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் உலா வந்தது. மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், வாழைப்பழங்களை வீசியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்