இலையுதிர் காலம் முடிந்து துளிர் விடும் ரப்பர் மரங்கள்

குமரி மாவட்ட பகுதிகளில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் முடிந்து மரங்கள் மீண்டும் துளிர்த்து வருகின்றன. இதையொட்டி தேன் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

Update: 2022-02-15 18:12 GMT
திருவட்டார், 
குமரி மாவட்ட பகுதிகளில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் முடிந்து மரங்கள் மீண்டும் துளிர்த்து வருகின்றன. இதையொட்டி தேன் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இலையுதிர் காலம்
குமரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக ரப்பர் விவசாயம் ெசய்யப்படுகிறது. ரப்பர் மரங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலையுதிர் காலம் வருகிறது. இந்த காலக்கட்டத்தில் இலைகள் உதிர்ந்து மரங்கள் மொட்டையாக காட்சி அளிக்கும்.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து ரப்பர் மரத்தில் இருந்து இலைகள் உதிர்ந்தது. தற்போது பெரும்பாலான தோட்டங்களில் இலைகள் உதிர்ந்து புதியதாக இலைகள் உருவாகியுள்ளன. புதிய இலைகள் பல அடுக்குகளாக துளிர்த்து பூக்கள் பூக்க தொடங்கி உள்ளது. 
தேன் உற்பத்தி அதிகரிப்பு
கடந்த மாதம் வெறும் மரக்கிளைகளுடன் காட்சி தந்த ரப்பர் தோட்டங்கள் தற்போது பச்சை பட்டாடை விரித்தது போல் பச்சைப்பசேல் என காட்சி தருகிறது. கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருவதால் ரப்பர் மரங்களில் வேகமாக இலைகள் உருவாகி மிகவும் ரம்யமாகக்காட்சி தருகிறது.
திருவட்டார், மாத்தார் பகுதியில் பல ரப்பர் தோட்டங்களில் தேனீ பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலையுதிர்காலம் முடிந்து பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால் ரப்பர் தோட்டங்களில் வைக்கப்பட்டுள்ள தேனீ பெட்டிகளில் தேன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், தேனீ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்