மராட்டிய மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுவிப்பு

பழுதான படகை சரி செய்ய கரை ஒதுங்கிய போது மராட்டிய மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட்டனர்.

Update: 2022-02-15 18:10 GMT
கொல்லங்கோடு, 
பழுதான படகை சரி செய்ய கரை ஒதுங்கிய போது மராட்டிய மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட்டனர்.
குமரி மீனவர்கள்
குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் குமரியை சேர்ந்த சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடந்த 8-ந் தேதி மராட்டிய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகின் பழுது ஏற்பட்டது. இதனால் படகை இயக்க முடியவில்லை. 
இதையடுத்து மீனவர்கள் செயற்கைகோள் தொலைப்பேசி மூலம் இந்திய கடற்படையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய கடற்படை வீரர்கள் மீனவர்கள் இருந்த பகுதிக்கு சென்று படகில் பழுதான பாகத்தை தற்காலிகமாக சரிசெய்து கொடுத்தனர் 
கரை ஒதுங்கினர்
தொடர்ந்து மீனவர்கள் தங்களது படகை முழுமையாக சரி செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் உள்ள ரெத்தினகிரி துறைமுகத்தில் கரை ஒதுங்கினர். 
அங்கு படகை சரி செய்துவிட்டு திரும்பி செல்ல முயன்ற போது அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் படகையும், மீனவர்களையும்  சிறைப்பிடித்தனர். தொடர்ந்து படகில் இருந்த மீன்களை ஏலம் இட போவதாகவும், அனுமதி இல்லாமல் படகு வந்ததால் அபராதம் விதிப்பதாகவும் கூறினர்.
விடுவிப்பு
இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அத்துடன் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், ரெத்தினகிரி மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட படகும், மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளதாக குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க இணைய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோஸ்பில்பின் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்