கல்யாணவெங்கடரமண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தான்தோன்றிமலை கல்யாணவெங்கடரமண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-15 18:05 GMT
கரூர்
கரூர்
கொடியேற்றம்
கரூர் அருகே உள்ள  தான்தோன்றிமலையில் அமைந்துள்ள தென் திருப்பதி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற கல்யாணவெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி  இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழாவையொட்டி கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து அன்று கோவில் கொடிமரத்தில் பட்டாச்சாரியார்கள் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தனர். 
திருக்கல்யாண உற்சவம் 
இதனையடுத்து நேற்று 7-ம் நாள் பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலின் வடபுறம் அமைந்துள்ள மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி இருந்த கல்யாண வெங்கட்ரமண சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஹோமங்கள் நடத்தி மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யத்தை தர்ப்பணம் செய்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 
இதில் கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் உட்பட பக்தர்கள்  திரளானோர் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். இதனையடுத்து நாளை (வியாழக்கிழமை)  மாசிமக தேரோட்டமும், வருகிற 19-ந் தேதி தெப்ப தேரோட்ட நிகழ்வு நடைபெறுவதுடன் 20-ந் தேதி வெள்ளி கருட சேவை நடைபெறுகிறது. 26-ந் தேதி புஷ்ப வாகனத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்