நாகர்கோவிலில் தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், மனமுடைந்த தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-15 18:01 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், மனமுடைந்த தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தபால் ஊழியர்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கல்மட தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
கணேசன் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் கடந்த சில நாட்களாக கணேசன் மனமுடைந்து காணப்பட்டார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கணேசன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர்களும், அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வழக்கம்போல்  சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்கச் சென்றார். 
தற்கொலை
 நேற்று காலையில் வெகுநேரமாகியும் கணேசன் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி அறைக்கதவை திறந்து பார்த்தபோது, கணேசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர்.பின்னர், இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்