10 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
உத்தமபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது அதன் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வருசநாடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்லம் மகன் சுஜித் (வயது 22) என்பவரை மடக்கிப் பிடித்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்கு மூட்டையில் சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அதை கேரளாவுக்கு கடத்திச் சென்றதாக தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து சுஜித்தை கைது செய்தனர்.
தப்பி ஓடிய வருசநாட்டை சேர்ந்த ஜெயக்குமார் மகன் கார்த்தியை தேடி வருகின்றனர். இதேபோல், கூடலூரில் சாய் என்ற முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது 5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அங்கு கஞ்சா பதுக்கியதாக மேலக்கூடலூரை சேர்ந்த ராஜா மகன் ராம்குமாரை (22) கைது செய்தனர். மாட்டுக்கொட்டகை உரிமையாளர் முத்துப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.