கனகசபை முன்பு மகனுடன் தீட்சிதர் திடீர் போராட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்கு செல்ல பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்க கோரி கனகசபை முன்பு அமர்ந்து மகனுடன் தீட்சிதர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;
சிதம்பரம்,
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கனகசபைக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய தற்போது தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சக்திகணேஷ் தீட்சிதர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பக்தர்களை அங்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த விவாகரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகசபைக்குசென்ற சக்தி கணேஷ் தீட்சிதர் 3 தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். அதேபோல் பெண் பக்தர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலுக்கு அவப்பெயர்
இந்த நிலையில் நேற்று தீட்சிதர்கள் தரப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
2 நாட்கள் முன்பு ஒரு சம்பவம் நடராஜர் கோவிலில் நடந்தது, கோவிலில் வழிமுறையை நியமித்து உள்ளோம். சக்தி கணேஷ் தீட்சிதர், கோவில் சட்டத்திற்கு கட்டுப்படாமல் கனகசபைக்கு சென்றார். கனக சபைக்கு பொதுமக்கள், தீட்சிதர்கள், வி.ஐ.பி.க்கள் என்று யாருக்கும் அனுமதி இல்லை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று, சக்தி கணேஷ் தீட்சிதர் அவரது மகன் தர்ஷனுடன் சேர்ந்து தவறான செயலில் ஈடுபட்டு வருகிறார். கோவிலுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார். அரசு தலையிட்டு கையகப்படுத்த வேண்டும், நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும் என்று செய்து வருகிறார். அதனால் பொது தீட்சிதர்கள் அனைவரும் சேர்ந்து அவரை சஸ்பெண்டு செய்தோம். போலீஸ் நிலையத்தில் எங்கள் மீது தவறான புகார் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தனர்.
திடீர் போராட்டம்
இந்த சூழ்நிலையில் திடீரென கனகசபை முன்பு, சக்திகணேஷ் தீட்சிதர், அவருடைய மகன் தர்ஷன் ஆகியோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைத்து தரப்பு மக்களையும் கனக சபைக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தீட்சிதர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அவர்கள் இருவரையும் வெளியேற செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.