‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-02-15 17:26 GMT
தார் சாலை சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கல்லூர் ஜல்லிக்கட்டு சாலை வழியாக செட்டிநாடு பள்ளத்தூர் செல்லும் 5 கிலோ மீட்டர் தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பையா, புதுக்கோட்டை.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆத்தூர் போஸ்ட், வாழியூரில் உள்ள 2 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சிறுமிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லீலாவதி, புதுக்கோட்டை.
கட்டிட கழிவுகளால் விபத்து அபாயம்
கரூர் மாவட்டம் நொய்யலில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள இளங்கோ நகரில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு உள்ளது. பலத்த காற்று வீசினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் தூசிபடுவதால்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், இதனை இங்கு கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், கரூர்.
செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை
கரூர் மாவட்டம் புகழூர் வாய்க்கால் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டது. ஒரம்புப்பாளையம், கவுண்டன்புதூர், செல்வ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய நிலத்தில் வெளியேறும் உபரிநீர் இந்த குளத்தில் கலக்கிறது. பின்னர் குளம் நிரம்பி வழிந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய்களில் கலக்கிறது. இந்த குளத்தில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளதால் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கரூர்.

மேலும் செய்திகள்