செல்போன் கோபுரத்தில் ஏறி 2 மணி நேரம் கீழே இறங்க மறுத்த தொழிலாளி

வலங்கைமானில் 90 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி 2 மணி நேரம் கீழே இறங்கி வர மறுத்தார். அவரது உறவினர்கள் கதறி அழுததைத்தொடர்ந்து அவர் கீேழ இறங்கி வந்தார்.

Update: 2022-02-15 17:14 GMT
வலங்கைமான்;
வலங்கைமானில் 90 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி 2 மணி நேரம் கீழே இறங்கி வர மறுத்தார். அவரது உறவினர்கள் கதறி அழுததைத்தொடர்ந்து அவர் கீேழ இறங்கி வந்தார். 
 கோபுரத்தில் ஏறினார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தாணி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகில் ஒரு செல்போன் கோபுரம் உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் ஒருவர் திடீரென ஏறி கோபுரத்தின் உச்சி பகுதிக்கு சென்றார். 
சுமார் 90 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஆபத்தான நிலையில் ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கும், வலங்கைமான் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 
பேச்சுவார்த்தை 
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராமன் உள்ளிட்டோர் செல்போன் கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கி வருமாறு கூறினர். 
ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்தார். மாலை 3 மணி அளவில் செல்போன் கோபுரத்தில் ஏறிய அவர் நேரம் செல்லச்செல்ல வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டே இருந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் இது குறித்து அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 
கதறி அழுதனர்
இதைத்தொடர்ந்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்றவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கி வருமாறு கூறினர். அப்போதும் அவர் கீழே இறங்கி வர மறுத்தார். இதனால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். 
இதனைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து மெதுவாக கீேழ இறங்கி வந்தார். இதைக்கண்டு அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
பரபரப்பு
விசாரணையில் அவர் கும்பகோணம் அருகே உள்ள தில்லையம்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார்(வயது 40) என்றும் கூலித்தொழிலாளியான செல்வக்குமார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. செல்வக்குமாருக்கு அறிவுரை வழங்கிய போலீசார் அவரை அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். 
செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே இறங்க மறுத்த தொழிலாளியால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 --------------


மேலும் செய்திகள்