வடமதுரை அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது
வடமதுரை அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (வயது 38), மதுரை செல்லூரை சேர்ந்த மயில்வாசகம் (39) என்பதும், இவர்கள் கடந்த 7-ந்தேதி வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டியில் சரவணன் என்பவரது வீட்டின் பீரோவை உடைத்து 2½ பவுன் நகை, 70 கிராம் வெள்ளிக்கொடி மற்றும் ரூ.3 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.