அ.தி.மு.க.வுக்கு தெம்பு இருந்தால் சட்டசபையை முடக்கட்டும் திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க.வுக்கு தெம்பு இருந்தால் சட்டசபையை முடக்கட்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-02-15 14:54 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் போது கொரோனாவின் 2-வது அலை பரவி ஆபத்தான நிலையில் தமிழகம் இருந்தது. பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா வார்டுக்கு உள்ளேயே சென்று முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.
பெண்களுக்கு உரிமை தொகை 
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓராண்டில் ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 9 மாதங்களில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டது. இதனால் கொரோனாவின் 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அதன்மூலம் இந்தியாவில் சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது அரசு கஜானா காலியாக இருந்தது. அதோடு ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்தது.
எனினும் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, மற்றும் பெட்ரோல் விலையில் முதல்கட்டமாக ரூ.3 குறைப்பு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து விரைவில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்கு தெம்பு இருந்தால்...
மேலும் கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் இல்லம் தேடி கல்வி திட்டம், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்துக்குள் இலவச சிகிச்சை உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக சட்டசபையை முடக்க போவதாக கூறுகிறார்.
சட்டசபையை முடக்கினால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். அ.தி.மு.க.வுக்கு தெம்பு இருந்தால் சட்டசபையை முடக்கி பார்க்கட்டும். அதன்பின்னர் தேர்தல் நடைபெற்றால் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும். அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது.
நான் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். ஆனால் என்னை காணவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எங்கள் வீட்டில் கூட இப்படி தேடவில்லை. சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றும்போது அவருக்கு எதிரே தான் அமர்ந்து இருந்தேன். அவர் மேஜைக்கு மேலே பார்த்து இருந்தால் என்னை பார்த்து இருக்கலாம்.
திண்டுக்கல் மாநகராட்சி 
மதுரையில் ஒரு செங்கலை மட்டும் வைத்து விட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததாக பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூறின. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல்லை மாநகராட்சியாக அறிவித்து ஒரு பலகையை மட்டும் வைத்தனர். ஆனால் மாநகராட்சிக்கான கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்யவில்லை. இதனால் கிராமம் போன்று திண்டுக்கல் மாநகராட்சி உள்ளது. திண்டுக்கல்லின் முதல் பெண் மேயர் பதவி தி.மு.க.வுக்கு கிடைத்ததும் அகலமான சாலைகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இதற்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, வாள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், கன்னிவாடி அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்