வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 346 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன.
விழுப்புரம் நகராட்சிக்கு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள இ.எஸ். கலை அறிவியல் கல்லூரியும், திண்டிவனம் நகராட்சிக்கு திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய கட்டிடமும், அனந்தபுரம் பேரூராட்சிக்கு செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் தளமும், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு டி.தேவனூர் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியும், செஞ்சி பேரூராட்சிக்கு செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தரைத்தளமும், மரக்காணம் பேரூராட்சிக்கு மரக்காணம் மேலவீதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியும், வளவனூர் பேரூராட்சிக்கு வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தற்போது நடந்து வருகிறது.
கண்காணிப்பு கேமரா
குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் சுற்றிலும் வலை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, மருத்துவ குழுவினருடன் மருத்துவ அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குகள் எண்ணும் இடத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. அதுபோல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறை. அந்த அறையின் வெளிப்புற பகுதிகள், வாக்கு எண்ணும் மைய வளாக பகுதிகள், அங்குள்ள பிரதான நுழைவுவாயில் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அங்கு வாக்கு எண்ணுவதற்கு ஏற்ப மையங்களை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த முன்னேற்பாடு பணிகளை அவ்வப்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.