தந்தை மகன் மோதலை விலக்க சென்ற பொக்லைன் ஆபரேட்டர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்
தந்தை மகன் மோதலை விலக்க சென்ற பொக்லைன் ஆபரேட்டர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார்இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்
போத்தனூர்
தந்தை மகன் மோதலை விலக்க சென்ற பொக்லைன் ஆபரேட்டர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தந்தை- மகன் மோதல்
கோவை ஒத்தக்கால் மண்டபம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது30). பொக்லைன் ஆபரேட்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தேனியை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ராஜேஷ்கண்ணா (27). ஆட்டோ டிரைவர். இவர் தனது குடும்பத்தினருடன் விஷ்ணுவின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.
ராஜேஷ்கண்ணா குடிபோதையில் தனது தந்தை காமராஜூடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.
இதை பார்த்த விஷ்ணு, தந்தை- மகன் தகராறை விலக்கி விட்டு ராஜேஷ்கண்ணாவை கண்டித்தார்.
கழுத்து நெரிப்பு
இதில், ஆத்திரம் அடைந்த ராஜேஷ்கண்ணா, விஷ்ணுவை பிடித்து கழுத்தை நெரித்து சுவற்றில் சாய்த்து தாக்கியதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்கள் 2 பேரையும் விலக்கினர்.
இதையடுத்து விஷ்ணு தனது வீட்டின் குளியலறைக்கு சென்றார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவை திறக்கவில்லை.
உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு விஷ்ணு மயங்கி கிடந்தார்.
இதனால் பதற்றம் அடைந்த அவர் விஷ்ணுவை மீட்டு அருகில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், விஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
ஆட்டோ டிரைவர் கைது
இது குறித்த புகாரின் பேரில் செட்டிப்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ராஜேஷ்கண்ணாவை கைது செய்தனர். விசாரணையில், தந்தை- மகன் மோதலை விலக்க சென்ற விஷ்ணுவின் கழுத்தை ராஜேஷ்கண்ணா நெரித்ததில் இறந்தது தெரிய வந்தது.