வாலாஜாபாத்தில் தொழிலாளி குத்திக்கொலை
வாலாஜாபாத்தில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 62) கூலித்தொழிலாளி. இவர் வாலாஜாபாத் ராஜ வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வந்த நபருக்கும், முனுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் முனுசாமியை அந்த நபர் திடீரென தன்னுடைய பையில் வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு வேகமாக சென்று விட்டார். நிலைகுலைந்து கீழே விழுந்த முனுசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார், வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் தொழிலாளியை குத்தி விட்டு தப்பிச்சென்றவர் தென்காசி, கடையநல்லூர் பகுதியை சேர்ந்த குமார்(47) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.