ஆடு வாங்க வந்தவரிடம் ரூ.86,500 பறிமுதல்

பட்டுக்கோட்டையில், ஆடு வாங்க வந்தவரிடம் ரூ.86,500-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-15 13:02 GMT
பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டையில், ஆடு வாங்க வந்தவரிடம் ரூ.86,500-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று காலை பட்டுக்கோட்டை-தஞ்சை சாலை பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

பணம் பறிமுதல்

அப்போது தஞ்சை பகுதியில் இருந்து ஒரு மினி லாரி பட்டுக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தி சோதனையிட்டார். 
அந்த மினி லாரியில் இருந்த அய்யம்பேட்டையை சேர்ந்த மைதீன் என்பவர் ஆடு வாங்க வந்ததாக பறக்கும் படையினரிடம் கூறினார். மேலும் அவரிடம் ரூ.86 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. 
இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததை தொடர்ந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்