சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் பரபரப்பு: வேகமாக வந்த சொகுசு கார், சூப்பர் மார்க்கெட்டுக்குள் பாய்ந்தது

சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார், சாலையோரம் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் பாய்ந்தது. இதில் ஊழியர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-02-15 12:50 GMT
பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர் ரவுண்டானாவில் இருந்து திருமங்கலம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தது. முன்னால் வந்த கார், வேகமாக ெசன்றுவிட, அதன் பின்னால் வந்த சொகுசு கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் பாய்ந்தது.

சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. கடையின் முன்புறம் இருந்த மின்கம்பம் மற்றும் சிறிய கடையை இடித்து தள்ளியபடி சாலையோர நடைபாதை மீது ஏறி பாய்ந்து வந்த சொகுசு கார், சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் கதவில் மோதி நின்றது.

மின் கம்பத்தை இடித்து தள்ளியதால் அதில் இருந்து தீப்பொறிகள் பறந்தது. இதனால் அந்த கடை முன் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. கடை முன்பு நின்றிருந்த ஊழியர்கள் சிலர் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.

உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கூட்டம் கூடியதால் காரில் வந்தவர்கள், நைசாக அங்கிருந்த நழுவி சென்றனர். சூப்பர் மார்க்கெட்டின் வெளியே நின்றிருந்த கடை ஊழியர் ஒசிம் என்பவர் மீது சொகுசு கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதாலும், சூப்பர் மார்க்கெட் மூடி இருந்ததாலும் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து பற்றி தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயம் அடைந்த ஊழியர் ஒசிம்மை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கார் பந்தயமா?

விசாரணையில் விபத்தில் சிக்கிய கார், அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், காரை அவருடைய மகன் ராஜேஷ் (வயது 21), தன்னுடைய நண்பர்களோடு ஓட்டி வந்து விபத்தில் சிக்கியதும் தெரிந்தது.

சாலையில் மின்னல் வேகத்தில் வரும் கார், சூப்பர் மார்க்கெட்டுக்குள் பாய்ந்து செல்லும் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் விபத்து காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் சொகுசு கார்களில் போட்டி போட்டு வேகமாக வந்து இருப்பது தெரிந்தது.

எனவே அவர்கள், கார் பந்தயத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்