தலையை துண்டித்து வாலிபரை கொன்ற 4 பேர் கைது

தலையை துண்டித்து வாலிபரை கொன்ற 4 பேர் கைது

Update: 2022-02-15 11:48 GMT
திருப்பூர், பிப்.16-
திருப்பூரில் தலையை துண்டித்து வாலிபரை கொலை செய்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வாலிபர் படுகாயம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேலையூரை சேர்ந்தவர் சதீஷ் வயது 25. இவர் திருப்பூர் சந்திராபுரம் பாரதிநகர் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் திருச்சி மாவட்டம் முசிறி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த ரஞ்சித் 20 என்பவரும் வேலை செய்து வந்தார். கடந்த 13 ந்தேதி இரவு சதீசும், ரஞ்சித்தும் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் இவர்களை எம்.பி.நகரில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றதாக தெரிகிறது. இதில் ரஞ்சித்தை அந்த கும்பல் கத்தி, அரிவாளால் தாக்கியது. அவர் படுகாயத்துடன் தப்பி குடியிருப்பு பகுதிக்கு வந்தார். காயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள்.
தலையை வெட்டி எடுத்துச்சென்றனர்
இந்தநிலையில் காட்டுப்பகுதியில் போலீசார் சென்று பார்த்தபோது அங்கு சதீஷ் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய தலையை காணவில்லை. மர்ம கும்பல் தலையை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி ஆகியோர் கண்காணிப்பில் நல்லூர் சரக உதவி கமிஷனர் லட்சுமணகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றினார்கள். அதில் 3 பேரின் உருவம் சிக்கியது தெரியவந்தது. அதை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள்.
4 பேர் கைது
இந்த நிலையில் தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக மதுரை அலங்காநல்லூர் கல்லணையை சேர்ந்த ராம்குமார் 25, சிவகங்கை மாவட்டம் பாலையூர், திருப்புவனத்தை சேர்ந்த சுபா பிரகாஷ் , மதுரை மாவட்டம் மேலூர் புளியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் 25, தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 24 என்பது தெரியவந்தது. இவர்களில் ராம்குமார் பல்லடம் ஜி.என்.கார்டன் பகுதியிலும், சுபாபிரகாஷ் திருப்பூர் சந்திராபுரத்திலும், மணிகண்டன் செரங்காட்டிலும், சதீஷ்குமார் கரட்டாங்காடு பகுதியிலும் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, கொலையான சதீசின் தலையை எம்.எஸ்.நகரில் உள்ள குப்பை தொட்டியில் வீசி சென்றதாக தெரிவித்தனர். நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து சதீசின் தலையை போலீசார் மீட்டனர். கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை தலையை எடுத்துச்சென்று குப்பை தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகளை தனிப்படையினர் கைது செய்ததற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
குடிபோதையில் தகராறு
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறியதாவது
சதீஷ், ரஞ்சித் இருவரும் கடந்த 13ந் தேதி காட்டுப்பகுதியில் மது குடித்துள்ளனர். அப்போது ராம்குமார் உள்ளிட்டவர்கள் மது அருந்த அங்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சதீஷ், ரஞ்சித் இருவரும் பாரதிநகர் பகுதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வந்து பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதனால் புதிதாக வந்தவர்கள் இங்கு வந்து வாக்குவாதம் செய்வதா என்று பிரச்சினை மேலும் பெரிதாகியுள்ளது.
அப்போது ரஞ்சித்தை அந்த கும்பல் தாக்கியதும், ரஞ்சித் தனது செல்போனை விட்டு விட்டு அவர் மட்டும் ஓடி சென்று விட்டார். அந்த கும்பல் செல்போனை எடுத்துள்ளது. மேலும் ரஞ்சித் நண்பரான சதீசை அவர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். போன் செய்து ரஞ்சித்தை இங்கு வரச்சொல் என்று சதீசை தாக்கியுள்ளனர். அவரும் அவ்வாறு செய்ய, சிறிது நேரத்தில் ரஞ்சித் அங்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு அரிவாள், கத்தியால் அந்த கும்பல் ரஞ்சித்தை தாக்கியுள்ளது. கத்திகுத்து, வெட்டுக்காயத்துடன் ரஞ்சித் அவர்களிடம் தப்பி ஓடியுள்ளார். அதன்பிறகு அருகில் இருந்தவர்கள் மூலமாக அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.
மேலும் சிலருக்கு தொடர்பு
ரஞ்சித் தப்பி ஓடியதால் கோபமடைந்த கும்பல், மீண்டும் பேசி அவரை காட்டுப்பகுதிக்கு வரவழைக்குமாறு சதீசை வற்புறுத்தியுள்ளது. சதீஷ் போன் செய்தும் ரஞ்சித்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரம் செல்ல, செல்ல பொறுமையை இழந்த அந்த கும்பல், பின்னர் சதீசை தாக்கியத்துடன் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்கள், சதீசின் தலையை வெட்டி எடுத்து சென்று குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளனர். 
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகிறோம். குடிபோதையில் ஏற்பட்ட தகராறை தவிர கொலைக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ராம்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

----

மேலும் செய்திகள்