உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
தண்டையார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரம்பூர்,
சென்னை மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு 900-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு பட்டா, மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை கண்டித்து வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
மாநகராட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அந்த பகுதி முழுவதும் கண்டன சுவரொட்டிகளும் ஒட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள், தங்கள் தேவைகளை நிறைவேற்றி தராததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கையில் கருப்பு கொடியுடன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.