காதலர் தினம் கொண்டாட்டம் கடற்கரை, பூங்காக்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் பூங்காக்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Update: 2022-02-14 21:32 GMT
நாகர்கோவில்:
காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் பூங்காக்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
காதலர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும் காதலர் தினத்துக்கு எதிர்ப்புகளும் உள்ளன. காதலர் தினமான நேற்று பொது இடங்களில் சுற்றும் காதல் ஜோடிகளை பிடித்து திருமணம் செய்து வைப்போம் என சில அமைப்புகள் எச்சரித்து இருந்தன. இதையடுத்து சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம், சொத்தவிளை, சங்குத்துறை பீச், முட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 எச்சரித்த போலீசார்
காதலர் தினம் என்ற போர்வையில் பொதுஇடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து இருந்தனர். அதேபோல் சில இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அதன்படி நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு நேற்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடிகள் வந்தனர். அவர்களில் சிலர் போலீசை பார்த்ததும் அவசர, அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். முகத்தை மூடியவாறு பல ஜோடிகள், மோட்டார் சைக்கிள்களில் வேகமாக பறந்ததையும் காணமுடிந்தது.
கோவில்களில்
காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த ரோஜாக்களை வழங்குது வழக்கம். இதையொட்டி பூக்கடைகளில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பல்வேறு வகையிலான ரோஜாக்களை காதலர்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர். 
சில காதலர்கள் கண்ணியமான முறையில் கோவில்களில் வந்து வழிபாடு செய்தனர். நாகர்கோவில் நாகராஜா கோவில், அழகம்மன் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் வழக்கத்துக்கு மாறாக நேற்று அதிகளவில் காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடிகளையும் காண முடிந்தது.
கன்னியாகுமரி
 காதலர் தினத்தையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் காதலர்கள் குவிந்தனர். அதிகளவிலான காதலர்கள் மோட்டார் சைக்கிளில் வலம் வந்ததை பல இடங்களில் காணமுடிந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு பூங்கா மற்றும் கடற்கரைகளில் காதலர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடல் அழகை பார்த்து ரசித்தனர். சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 
மேலும், காதலர் தினத்தையொட்டி கடற்கரைசாலை, காந்தி மண்டபம் சாலை, சன்னதி தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் காதலர்களுக்கான பரிசு பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை காதலர்கள் ஆர்வமுடம் தேர்வு செய்து பரிமாறிக்கொண்டனர். கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்