குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை
குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
குன்னம்:
கூலித்தொழிலாளி
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(வயது 45). இவர்களுக்கு விஜயலட்சுமி, அஸ்வினி, அபி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீமான் புண்ணியகோடி என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த ஆறுமுகம் கூலி வேலை செய்து வருகிறார். விஜயலட்சுமிக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். அஸ்வினி கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். அபி பிளஸ்-2 வகுப்பும், ஸ்ரீமான் புண்ணியகோடி 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று வீட்டில் முத்துலட்சுமி சமைப்பதற்காக கோழி இறைச்சியை வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், இறைச்சி வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்துலட்சுமி துடி துடித்து உயிரிழந்தார்.
கைது
இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த ஆறுமுகம், இது பற்றி அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த அவர்கள், இது பற்றி மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து, அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மங்களமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.