கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:
முற்றுகை
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந்தேதி தெப்பத்தேர் விடும் திருவிழா நடந்தது. அந்த திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்வது வழக்கம்.
மேலும் தெப்பத்தேர் திருவிழா நடக்கும்போது அனைத்து சமுதாய மக்களுக்கும் தண்டோரா மூலம் தெரியப்படுத்துவது வழக்கம். ஆனால் கடந்த 11-ந்தேதி நடந்த தெப்பத்தேர் விடும் திருவிழாவில் பட்டியல் இனத்தை சேர்ந்த சமுதாய மக்கள் வசிக்கும் தெருவுக்கு தண்டோரா மூலம் தெரியப்படுத்தவில்லை. ஆனாலும் நாங்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டோம். திருவிழா நடந்து முடிந்தவுடன் அனைவருக்கும் விபூதி வழங்கப்பட்டு வந்தது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் விபூதி கேட்டதற்கு, அவர்களை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் எங்கள் உரிமை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்து விட்டு, கலைந்து சென்றனர்.