ரூ.2 ஆயிரம் கடனுக்கு 37 ஆண்டுக்கு பின்பு நோட்டீஸ் அனுப்பிய வங்கி

ரூ.2 ஆயிரம் கடனுக்கு 37 ஆண்டுக்கு பின்பு நோட்டீஸ் அனுப்பிய வங்கி

Update: 2022-02-14 21:00 GMT
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்த சேகர் (வயது 62). எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 14.12.1985-ல் கடை வைப்பதற்காக  ரூ.2 ஆயிரம் சைக்கிள் கடன் பெற்றார். அதன்பின் வந்த அரசுகள் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி என அறிவித்ததால் தனது கடனும் தள்ளுபடியானதாக நினைத்துக்கொண்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீர் என்று கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தக்கோரி 37 ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதுகுறித்து சேகர் கூறியதாவது, 1985-ம் ஆண்டு சைக்கிள் கடை வைப்பதற்காக கூட்டுறவு சங்கத்தில் ரூ.2 ஆயிரம் சிறுகுறு தொழில் கடன் வாங்கினேன். அதன்பின் தமிழக அரசால் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி என்று கூறியதால் எனது கடனும் தள்ளுபடியாகி விட்டது என்று இருந்து விட்டேன். மோட்டார் சைக்கிள் வருகை அதிகரித்ததால் சைக்கிள் கடை தொழிலை விட்டுவிட்டு தற்போது எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் 37 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது எனக்கு கடனை திருப்ப செலுத்தக்கோரி நோட்டீஸ் வந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் ஏன் திருப்ப செலுத்தவில்லை என வங்கியில் தகவல் தரவில்லை. அப்போதே கூறியிருந்தால் கடனை நான் திருப்பி செலுத்தியிருப்பேன். இதில் யார் மீது தவறு என்று புரியவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்