‘ஹிஜாப்' விவகாரம் குறித்த மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை
‘ஹிஜாப்’ விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசு பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இருப்பதாக வக்கீல் வாதிட்டார்.
பெங்களூரு: ‘ஹிஜாப்’ விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசு பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இருப்பதாக வக்கீல் வாதிட்டார்.
போராட்டத்தில் வன்முறை
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில்(மேல்நிலைப்பள்ளி) இந்து-முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பள்ளி-கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் இல்லை
இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 18 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளனர். இந்த மனு மீது கடந்த 8-ந் தேதி தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அர்வில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் முடிவில், மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை 14-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார்.
அவர் தனது வாதத்தின்போது, ‘‘சீருடை குறித்து முடிவு எடுக்க கல்லூரி வளர்ச்சி குழுவுக்கு அதிகாரம் இல்லை. அந்த குழுக்களுக்கு அரசு அதிகாரம் வழங்கியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும் இது ஏற்கத்தக்கது அல்ல. அந்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அவர்கள் சீருடை நிறத்திலேயே அந்த ஹிஜாப் அணிந்தனர். கேந்திரிய பள்ளிகளில்(மத்திய அரசு பள்ளிகள்) மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி உள்ளது’’ என்றார்.
இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றைக்கு(செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.