தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் ஊராட்சி பகுதியில் முல்லை நகர், அக்ரஹாரம் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை, தெரு விளக்குகள், சாக்கடை கால்வாய் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பல இடங்களில் சாக்கடை தண்ணீர் சாலைகளில் செல்கின்றன. எனவே கிருஷ்ணகிரி நகராட்சியையொட்டி உள்ள இந்த பகுதிகளில் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரி அருகே அரூர்- திருப்பத்தூர் சாலை பிரிகிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பிரியும் இடத்தில் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்த பகுதியில் சாலை முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக எடுக்க வேண்டும்.
மணிகண்டன், தர்மபுரி
சுகாதார சீர்கேடு
நாமக்கல் - சேலம் சாலையில் இருந்து ராமாபுரம்புதூர் பகுதிக்கு செல்ல இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பழுதான நிலையில் காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலையும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குமார், நாமக்கல்.
பஸ் இயக்கப்படுமா?
சேலத்தை அடுத்த மல்லூரில் உள்ளது பசுவநத்தம்பட்டி கிராமம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பகுதியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பசுவத்தம்பட்டி கிராமத்துக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ், பசுவநத்தம்பட்டி, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாநகரின் பல பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக 4 ரோடு, சத்திரம், சங்கர் நகர், மேயர் நகர், சாமிநாதபுரம், அரிசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை மிகுந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. அதிலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும் போது வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
செந்தில், அரிசிபாளையம், சேலம்.
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பஸ் நிலையம் முதல் கே.ஜி.எப். செல்லும் சாலையும், பேரிகை செல்லும் சாலையும் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே கனரக வாகனங்களும், இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தப்பட்டுள்ளதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் , வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே வேப்பனப்பள்ளி - கே.ஜி.எப் மற்றும் பேரிகை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரேசன், கிருஷ்ணகிரி.