“தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இல்லம் தேடி வரும்”- கனிமொழி எம்.பி. பிரசாரம்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இல்லம் தேடி வரும்” என கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

Update: 2022-02-14 20:39 GMT
சுரண்டை:
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இல்லம் தேடி வரும்” என்று கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

கனிமொழி எம்.பி. பிரசாரம்
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகளிலும் தனித்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று காலை கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
அப்போது திறந்த வேனில் நின்று அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பெண்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து தி.மு.க. ஆட்சி நடத்துகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அனைத்து பெண்களுக்கும் அரசு டவுன் பஸ்களில் இலவச பஸ் பயணம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் குடும்ப பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. 

இல்லம் தேடி வரும்
தமிழகத்தில் கொரோனா பேரிடரில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க இதுவரை 80 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிறுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது தி.மு.க. அரசு தான். முந்தைய அரசினால் கஜானா காலியாக்கப்பட்ட நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அந்த நிலையிலும் பொதுமக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது. 
தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் இல்லம் தேடி வரும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. தென்காசி பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

மேலும் செய்திகள்