எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 மாணவர்களும் சேர்ந்தனர்.;
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 மாணவர்களும் சேர்ந்தனர்.
மருத்துவ படிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-தேதி தொடங்கியது. 27-ந் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் 30-ந் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடைபெற தொடங்கியது.
இந்நிலையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் நேற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் நடந்த அகில இந்திய அளவிலான கலந்தாய்வு மூலம் 6 மாணவர்கள் சேர்ந்த நிலையில் நேற்று 75 மாணவர்கள் சேர்ந்தனர். வருகிற 18-ந் தேதி வரை மாணவர்கள் சேருவார்கள்.
150 மாணவர்கள் சேர்க்கை
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதில் அகில இந்திய அளவிலான ஒதுக்கீட்டில் 22 பேரும் சிறப்பு ஒதுக்கீட்டில் 3 பேரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் பொது கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுவார்கள். இதில் தற்போது வரை அகில இந்திய ஒதுக்கீட்டின்படி 6 மாணவர்களும், சிறப்பு ஒதுக்கீட்டில் 3 மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். பொதுப் பிரிவில்75 பேரும் சேர்ந்து உள்ளனர். அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவில் சேரும் மாணவர்கள் வருகிற 14-ந் தேதி வரை சேருவார்கள்.
பூஸ்டர் தடுப்பூசி
முதல் நாளில் மருத்துவ படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்த கட்டமாக பூஸ்டர் தடுப்பு ஊசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைகளிலும் அரசு விதித்துள்ளகொரோனா விதிமுறைகள் பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.