குலசேகரநாத சுவாமி கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு
காருகுறிச்சி குலசேகரநாத சுவாமி கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த காருக்குறிச்சியில் அமைந்துள்ளது சிவகாமி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோவில். இது பழமையான சிவாலயம் ஆகும். இங்கு நேற்று உலக மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபடவேண்டியும், மக்கள் குலம் என்றும் தழைக்க வேண்டியும் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலை 4.30 மணி அளவில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு 1008 செவ்விளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு ஆயிரக்கணக்கான செண்பகம், மனோரஞ்சிதம் மற்றும் தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் 1,008 தீப விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்புடைமருதூர் கஜனன் மகராஜ் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.