அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர்கள் வருகை
நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவா்கள் வந்தனர்.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவா்கள் வந்தனர்.
மருத்துவ படிப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் `நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்விக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு கடந்த மாதம் கலந்தாய்வு நடந்து முடிந்தது.
இதில் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தவர்களுக்கு கடந்த 31-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பு
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முதலாமாண்டு படிக்க 250 இடங்கள் உள்ளன. இதில் 37 இடங்கள் (15 சதவீதம்) மத்திய அரசு ஒதுக்கீட்டில் உள்ளது. இந்த இடங்களில் சிறப்பு பிரிவு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை நடந்து முடிந்தது. தொடர்ந்து கடந்த 8-ந் தேதி பொது ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. சேர்க்கை பணி முழுமை பெறாத நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு நேற்று தொடங்கும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
இதையொட்டி நேற்று மாணவர்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
பெட்டி, படுக்கையுடன் வந்தனர்
இதைத்தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்த மாணவர்கள் நேற்று பெட்டி படுக்கைகளுடன் வந்தனர். அப்போது தங்களது பெற்றோர், உறவினர்களை அழைத்து வந்திருந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள், கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை விவரங்களை சரிபார்த்து, மாணவ, மாணவிகளை தனியாக அங்குள்ள கலை அரங்கத்தில் வைத்து முதலாமாண்டு வகுப்பு தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தது.
அப்போது டீன் ரவிச்சந்திரன் அந்த மாணவர்களிடம், கல்லூரி மாணவர்கள் அனைவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள். 16-ந் தேதிக்குள் மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டு முறைப்படி வகுப்பு தொடங்கும், என்றார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு சென்று அதற்கான கட்டணம் மற்றும் விவரங்களை கேட்டறிந்தனர்.
பேட்டி
இந்த நிலையில் டீன் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பிற்கு இடம் ஒதுக்கப்பட்டவர்களில் 19 பேர் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வந்தனர். இன்று (அதாவது நேற்று) 190 பேர் வந்து உள்ளனர். ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு மாணவர்கள் ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.
கல்லூரிக்கு வந்தவர்கள் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்திய பின்னர் கல்லூரியில் இணைகின்றனர். இன்னும் சில மாணவர்கள் கல்லூரியில் சேராமல் உள்ளனர். அனைத்து மாணவர்களும் சேர்ந்த மறுநாளே வகுப்பு தொடங்கப்படும்.
புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளை யாரும் `ராக்கிங்' செய்யக் கூடாது என்று மற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். அதனை மீறி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.