80 மாணவ-மாணவிகள் வருகை
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதில் 80 மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதில் 80 மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.
வகுப்புகள் தொடக்கம்
இந்திய மருத்துவக்குழு நேற்று முதல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்திய நிலையில் தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் நேற்று முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 10 மாணவர்களும் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 8 மாணவர்களும் மற்றும் பொதுக்கலந்தாய்வு மூலம் 62 மாணவ- மாணவிகளும் ஆக மொத்தம் 80 மாணவ-மாணவிகள் வகுப்புகள் தொடக்க முதல் நாளான நேற்று வந்திருந்தனர்.
இலவச புத்தகங்கள்
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி இலவச பாட புத்தகங்களையும், இலவச உபகரணங்களையும் வழங்கினார்.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மருத்துவ கல்லூரியில் சேரவேண்டிய 150 மாணவர்கள் பட்டியல் கல்லூரி நிர்வாகத்திற்கு வந்துள்ள நிலையில் மீதமுள்ள மாணவர்களும் அடுத்த 2 தினங்களில் கல்லூரியில் வந்து சேர வாய்ப்பு உள்ளதாக கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தெரிவித்தார்.
மாணவ-மாணவிகள் மருத்துவப்படிப்பில் கடினமாக உழைத்து, சக மாணவ-மாணவிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் மற்றும் கல்லூரி விடுதிகளில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் சங்குமணி எடுத்து கூறினார்.