11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்த மோகன் மனைவி சுந்தரி. கடந்்த 1 ஆண்டுக்கு முன்பு மோகன் இறந்து விட்டார். இதனால் சுந்தரி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவரது மகள் கீர்த்தனா (வயது16), வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி ஹேராம் (12) இவரும் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை கீர்த்தனா, அவரது தம்பி ஹேராம் ஆகிய இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். மதியம் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு சென்ற கீர்த்தனா உரிய நேரத்தில் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் கீர்த்தனாவின் தம்பி ஹேராமை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
ஹேராம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கீர்த்தனா பள்ளி சீருடையுடன் தூக்கில் தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹேராம் சத்தம் போட்டுள்ளார். அக்கம்-பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று, தூக்கில் தொங்கிய கீர்த்தனாவை இறக்கி பார்த்தபோது அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்
ஆசிரியர் திட்டினாரா?
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவி கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இ்துகுறித்து கீர்த்தனாவின் சித்தப்பா சண்முகம் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்த கீர்த்தனா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் திட்டியதால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.