தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி அண்ணலக்ரஹாரத்தில் பொதுமக்கள் வசதிக்காக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. குப்பைத்தொட்டி நிறைந்து குப்பைகள் சாலையோரத்தில் சிதறி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சிதறி கிடக்கும் குப்பைகள் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வர தொடங்கி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி குப்பைத்தொட்டி கீழே சாய்ந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கும்பகோணம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டி.பி.எஸ். நகரில் உள்ள சாலை பராமரிப்பின்றி கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இதன் காரணமாக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜீவராஜ், தஞ்சை.
நாய்கள் தொல்லை
தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதி ஊராட்சி 1-வது வார்டு பிலோமினாநகர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகிறது. இவை அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பிடித்து தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை விரட்டி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர மற்றும் கார்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.