காதலனின் தொந்தரவால் முதல் கணவரை பிரிந்த பெண்

காதலனின் தொந்தரவால் முதல் கணவரை பிரிந்த பெண் மீண்டும் காதலனால் ஏமாற்றப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2022-02-14 19:02 GMT
முசிறி,பிப்.15-
காதலனின் தொந்தரவால் முதல் கணவரை பிரிந்த பெண் மீண்டும் காதலனால் ஏமாற்றப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
காதலித்தனர்
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வெள்ளூர் பஸ்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பட்டத்தி. இவரது மகள் பிரேமா (வயது 34). இவரும் முசிறி அருகே உள்ள சீனிவாசனநல்லூர் ஏரி குளத்தை சேர்ந்த ராஜா மகன் சண்முகம்(36) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவரம் சண்முகத்தின் பெற்றோருக்கு தெரியவரவே திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் மூல நட்சத்திரம் இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது.
தொந்தரவால் பிரிந்தனர்
இதனையடுத்து பிரேமாவுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெற்ற முதல் நாள் இரவே சண்முகம் தொலைபேசியில் பிரேமாவை தொடர்பு கொண்டு என்னிடம் வந்துவிடு என்று  பேசி தொந்தரவு கொடுத்தார்.
அதுமட்டுமின்றி குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தார். இந்த விவரம் பிரேமாவின் கணவருக்கு மறுநாளே தெரியவந்தது. அதன்பின் அவர் விவாகரத்து பெற்று சென்று விட்டார்.
ஆசை வார்த்தை
இதனையடுத்து சண்முகம் பிரேமாவிடம் திருமணம் செய்து கொள்வதாக மீண்டும் ஆசை வார்த்தை கூறி, அவருடன் பழகி வந்தார்.மேலும்கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் பிரேமாவிடம் ரூ.50 ஆயிரம்  மற்றும் தங்க நகையும் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சண்முகத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது. இதை அறிந்த பிரேமா சண்முகத்தின் தாயாரிடம்  கேட்டதற்கு அடித்து வெளியே தள்ளி விட்டார்களாம். இது குறித்து பிரேமா முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
வழக்கு
அந்த புகார்மனுவில், என்னை திருமணம் செய்துகொள்ளவதாக ஏமாற்றி நகை-பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சண்முகம் மற்றும் அவரது தாயார் செல்வி, தந்தை ராஜா ஆகிய 3 பேர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி சண்முகம் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்