கமுதி சார்பதிவாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

மானாமதுரையில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் கமுதி சார்பதிவாளரிடம் ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-14 18:44 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் கமுதி சார்பதிவாளரிடம் ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் மானாமதுரை வழிவிடும் முருகன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மகாதேவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். 
அப்போது கமுதியில் இருந்து மதுரை நோக்கி வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

சார்பதிவாளர்

காரில் வந்தவர் விருதுநகர் மாவட்டம் வெங்கடாசலபுரம் என்.ஜி.ஓ..காலனி பகுதியை சேர்ந்த மகபூப் பாஷா மகன் ஷேக்முகமது (வயது 38) ஆவார். இவர் கமுதி பத்திர பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து மானாமதுரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 
சார்பதிவாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்