ஏரிப்புதூர் கிராமத்தில் காளை விடும் விழா. மாடுகள் முட்டியதில் 21 பேர் காயம்

ஏரிப்புதூர் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. இதில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-02-14 18:35 GMT
அணைக்கட்டு

ஏரிப்புதூர் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. இதில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.

காளை விடும் விழா

அணைக்கட்டு தாலுகா ஏரிப்புதூர் கிராமத்தில் இருப்பாச்சி அம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. கலால் உதவி ஆணையர் வெங்கட்ராமன், கலால் தாசில்தார் ராஜேஸ்வரி, அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.வெங்கடேசன், ஆர்.வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாமூர்த்தி ஆகியோர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வாணியம்பாடி, குடியாத்தம், பரதராமி, வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 185 காளைகள் பங்கு பெற்றன.

காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடின. காளை ஓடுவதை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகள் மீதும். தடுப்புக் கம்புகள் மீதும் அமர்ந்து காளை ஓடுவதை ரசித்துப் பார்த்தனர். காளை ஓடும் தெருவில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்ததால் வேகமாக ஓடிய காளைகள் இளைஞர்களை முட்டி மோதி தூக்கி வீசியது.
21 பேர் காயம்

இதில் 21 பேர் காயம் அடைந்தனர் அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்கினர். அதிவேகமாக ஓடிய காளைக்கு முதல் பரிசு ரூ.77 ஆயிரத்து 501, இரண்டாவது பரிசு 65 ஆயிரத்து 501, மூன்றாவது பரிசு 52 ஆயிரத்து 501 உள்ளிட்ட 56 பரிசுகள் வழங்கப்பட்டன. 
வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒடுகத்தூர் தீயணைப்புத்துறை பாலாஜி தலைமையில். தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
 அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் விழாவை கண்காணித்தனர். தேர்தல் காரணமாக வருகிற 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை காளைவிடும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. இதனால் மாலை 3 மணிவரை மட்டுமே காளை விடும் விழா நடந்தது. 
ஏற்பாடுகளை ஏரிப்புதூர் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்