மோட்டார் சைக்கிளை திருட முடியாததால் பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்
மோட்டார் சைக்கிளை திருட முடியாததால் பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூர் சாவடி தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). இவர் தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவு சுமார் 12 மணிக்கு வீட்டின் அருகே சத்தம் வருவதை அறிந்த வடிவேல் வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார்சைக்கிளின் முன் சக்கரத்தை இருவரும், பின் சக்கரத்தை இருவரும் பிடித்து தூக்கி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வடிவேல் கத்தி கூச்சலிட்டு அருகில் இருப்பவர்களை அழைக்கவே சுதாரித்துக் கொண்ட திருடர்கள், வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு கையில் வைத்திருந்த பெட்ரோலை அதன் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிசென்று விட்டனர். இதுகுறித்து வடிவேல் நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.