திருவண்ணாமலை நகராட்சியை கைப்பற்ற போவது யார்?

திருவண்ணாமலை நகராட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

Update: 2022-02-14 18:22 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

பழமையான நகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. திருவண்ணாமலை நகராட்சி பழமையான நகராட்சி ஆகும். அதுமட்டுமின்றி இது ஆன்மிக நகரமாகும். 

திருவண்ணாமலை 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1946-ல் 2-ம் நிலை நகராட்சியாகவும், அதனை தொடர்ந்து 1971-ல் முதல் நிலை நகராட்சியாகவும், 2007-ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. 

இதில் 67 ஆயிரத்து 968 ஆண் வாக்காளர்கள், 74 ஆயிரத்து 155 பெண் வாக்காளர்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1 லட்சத்து 42 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

கடுமையான போட்டி

திருவண்ணாமலை நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 271 பேர் போட்டியிடுகின்றனர்.

 இதில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 35 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றனர். இதனால் திருவண்ணாமலை நகராட்சியை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. 

17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளங்கள் முழுங்க காலை முதல் இரவு வரை தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொண்டர் படைசூழ வீடு, வீடாக செல்லும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் தெருவில் கண்காணிப்பு கேமரா அமைத்து தருவதாகவும், குடிநீர் வசதி, கால்வாய் உள்ளிட்ட பணிகள் செய்து தருவதாகவும் வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கைப்பற்றப்போவது யார்?

மேலும் வாக்காளர்களை கவர சில வேட்பாளர்கள் கால்வாய் அடைப்புகளை சரி செய்வது போன்றும், குப்பைகளை அள்ளுவது போன்றும் புது யுக்திகளை கையாளுகின்றனர். 
வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கவும் சிலர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று யார் நகராட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்பது தேர்தல் பின்ரே தெரியவரும். 

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கினாலும் வேட்பாளர்கள் வெயிலை பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை நகராட்சியில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

மேலும் செய்திகள்